Published : 23 Apr 2022 06:08 AM
Last Updated : 23 Apr 2022 06:08 AM

ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 12,000 புத்தகங்கள் திடீர் மாயம்: உதவியாளர், கிளார்க் தற்காலிக பணிநீக்கம்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த 12 ஆயிரம் புத்தகங்கள் மாயமானது. இதுதொடர்பாக பணியில் இருந்து கிளார்க், உதவியாளர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வட்டாரக் கல்வி அலுவலக மையம் உள்ளது. இங்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தகங்களை சரி பார்த்தபோது, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கு வதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் 12 ஆயிரம் புத்தகம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம். அதிர்ச்சியடைந்த ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர் மாதம்மாள், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, விசாரணை நடத்தினார். பின்னர், வட்டாரக் கல்வி அலுவலக மையத்தில் பணியில் இருந்த உதவியாளர் தங்கவேல் (43), கிளார்க் திருநாவுக்கரசு (39) ஆகிய 2 பேரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஊத்தங்கரை போலீஸார் கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தகங்கள் மாயமான சம்பவம், கல்வித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x