Published : 23 Apr 2022 06:00 AM
Last Updated : 23 Apr 2022 06:00 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள, நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா உட்பட பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால், திருவாவடுதுறை மடத்துக்கு செல்லும் வழியில் ஆளுநருக்கு சில அமைப்பினர் அமைதியாக, ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநரின் பயண வழியில் எந்தவொரு சிறு இடையூறும் ஏற்படாமல் தமிழக அரசு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஆனால், பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரில் புகார் கொடுப்பதாக மிரட்டி வருகிறார். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் பணியில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயலாற்றி வருவதால், நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் எழுச்சி கொண்டு வருவதால் பாஜகவினர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
அவர்களது அச்சத்தை மறைத்துக் கொள்ள தமிழக அரசை மிரட்டும் அரசியலில் கே.அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தமிழகம் முழுவதும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் மலிவான அரசியலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். கே.அண்ணாமலையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஜனநாயக சக்திகள் களம் இறங்கி போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT