Published : 23 Apr 2022 06:22 AM
Last Updated : 23 Apr 2022 06:22 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, மீன்வளத் துறை மூலம் 5 மீனவ விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம்மதிப்பிலான விவசாய கடன் அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் பலர், திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என குற்றம்சாட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகள், ‘திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்டவாசகங்களுடன் கூடிய கோரிக்கைபதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
சிலர் கொசஸ்தலையாறு, ஆரணியாறு வடிநில கோட்ட பாசனக் கால்வாய் மற்றும் போக்குக் கால்வாய்கள், ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மாம்பாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காமல், சின்னமண்டலி கிராமத்தில் அமைக்க முயற்சிகள் நடப்பதாக கூறி, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர், ஆட்சியர் விவசாயிகள் மத்தியில் பேசும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர கான்கிரீட் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க தமிழக அரசு ரூ.43.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 75-வது சுதந்திர திருநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி, கிசான் மேளா வட்டார அளவில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மாவட்ட அளவில், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திலும் நடைபெற உள்ளது.
ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் வெங்கல், வெள்ளவேடு, பூச்சி அத்திப்பேடு, பட்டரைப்பெரும்புதூர்; பொன்னேரி, பாதிரிவேடு, கவரப்பேட்டை, சின்னநாகபூண்டி ஆகிய 8 துணை வேளாண் விரிவாக்கமையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT