

இரவு நேரங்களில் வாக்காளர் களுக்கு பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கூடுதலாக 1,280 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த எஸ்.பி.ஸ்ரீனிவாஸ் என்ப வர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு வை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பல கோடி ரூபாயை தமிழக தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள் ளது. தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பாக பணப் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணை யத்தின் நடவடிக்கைகள் கண் துடைப்பாக உள்ளன. எனவே தேர் தலில் பணம் பட்டுவாடா செய்யப் படுவதை தடுக்கவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க மளிக்கவும் தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதிபதிகள் கிருபாகரன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நடந்தது.
அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக் கானி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் 4 -ம் தேதி முதல் சட்டவிரோதப் பணம் மற்றும் மது ஆகியவற்றை தடுக்க 24 மணி நேரமும் 702 பறக்கும் படையினர், 712 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினரின் செயல்பாடுகளை கண்காணிக்க ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மே 10-ம் தேதி வரை ரூ. 69.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ. 45.64 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.26.32 கோடி வருமான வரித்துறை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மே 1-ம் தேதி முதல் சிஆர்பிஎஃப் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 16 ஆயிரத்து 800 பறக்கும் படைகள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க 1,280 கூடுதல் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மே 12-ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் இவர்கள் முடுக்கி விடப்படுவார்கள். 440 செக்-போஸ்ட்கள் அமைக்கப்பட்டு அதில் 300 பாரா-மிலிட்டரி குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதில்மனுவை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.