

`பாமக ஆட்சிக்கு வந்தால் தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகள் கட்டித் தரப்படும்’ என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி அளித்தார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சின்னமான மாம்பழத்தைக் காட்டி, அவர் பேசியதாவது:
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்திவிட்டன. அவர்கள் மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். அவர்களை மக்கள் நம்பக் கூடாது.
எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள் படித்த எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆக்டருக்கு வாய்ப்பு கொடுத்த நீங்கள் இந்த டாக்டருக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்துக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை 5 ஆண்டுகளில் நிறைவேற்றித் தருகிறேன்.
இலவச கல்வி கொடுப்போம், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம், உயர்தர மருத்துவ வசதிகளை செய்து தருவோம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உருவாக்கித் தருவோம். தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகள் கட்டித் தரப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும். தமிழகம் நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்படும்.
பாமகவின் வரைவு தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் காப்பியடித்து திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாங்கள் அறிவித்த 42 திட்டங்களை அப்படியே அவர்களும் அறிவித்திருக்கிறார்கள் என்றார் அவர்.