Published : 10 May 2016 08:29 AM
Last Updated : 10 May 2016 08:29 AM

அதிமுக ஆட்சி தொடரும் - புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 164 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியே தொடரும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக் காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. அதில், அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு 66 இடங்களே கிடைக்கும் என அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. பிற கட்சிகளுக்கு 4 தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அதிமுகவுக்கு 38.58 சதவீதம், திமுக அணிக்கு 32.11 சதவீதம், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு 8.55 சதவீதம், பாமகவுக்கு 4.47 சதவீதம் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 2.12 சதவீதமும், பாஜகவுக்கு 1.96 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| இச்செய்தி திருத்தப்பட்டுள்ளது. |

விளக்கம்:

என்.டி.டி.வி. நடத்தியது கருத்துக் கணிப்பு அல்ல..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட கருத்து கணிப்பு பற்றிய செய்தி கடந்த மே 10-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. அதே செய்தியில் தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கலாம் என்பது பற்றி என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் கணிப்பும் வெளியானது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டது கருத்து கணிப்பு. என்.டி.டி.வி. தொலைக்காட்சி வெளியிட்டது, முந்தைய தேர்தல் முடிவுகளின் புள்ளி விவர அடிப்படையில், தற்போதைய தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கலாம் என்பது குறித்து நிபுணர்கள் அலசி ஆராய்ந்த வெவ்வேறு சாத்தியங்கள் பற்றிய செய்தியாகும். ஆனால் ‘தி இந்து’ நாளிதழின் குறிப்பிட்ட அந்த செய்தியில், என்.டி.டி.வி.யும் கருத்து கணிப்பு அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது.

அத்தகைய தவறான தோற்றம் ஏற்பட்டமைக்காக வருந்துகிறோம்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x