Published : 22 Apr 2022 04:00 PM
Last Updated : 22 Apr 2022 04:00 PM

மரக்காணம் கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை... நீதி வென்றது: ராமதாஸ் மகிழ்ச்சி

ச.ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: மரக்காணம் கலவரம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாமகவினரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ''பொய்வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை; நீதி வென்றது'' என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் ராமதாஸ் கூறியவை: ''மரக்காணம் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து பாமகவினரையும் திண்டிவனம் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரக்காணம் கலவரம் என்பது பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அதில் பாமகவின் அப்பாவி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஆனால், திட்டமிட்டு பாமகவினர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன.

இப்போது அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாமக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், சசிக்குமார் உள்ளிட்ட 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் நீதி வென்றிருக்கிறது. இதே வன்முறையில் பாமகவினரின் படுகொலைக்கு காரணமானவர்கள் இதே நீதிமன்றத்தால் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தீர்ப்புகளில் இருந்தே மரக்காணம் கலவரத்திற்கு காரணம் யார் என்பது தெளிவாக புரியும்.

திண்டிவனம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உண்மைகளை எடுத்து வைத்து வாதாடி, நீதியை நிலைநாட்ட உதவிய பாமக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x