

சென்னை: இ-சேவை மையங்களுக்கு ஸ்டார் முறையில் ரேட்டிங் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில் விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமண சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகள் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்பு சான்றிதழ் ஆகிய 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த மையங்களில் சேவையின் தரம் குறித்து ஸ்டார் முறையில் ரேட்டிங் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் இ-சேவை மையங்களில் பொது மக்கள் சேவைகளை பெற்ற பின், அவர்கள் பெற்ற சேவை குறித்த மதிப்பீட்டை 1-5 ஸ்டார் ரேட்டிங் முறையில் தெரிவிக்கலாம். இதன் மூலம் மக்களின் குறைகளை அறிவதோடு இ-சேவை மையங்களின் சேவை பற்றிய தர மதிப்பீட்டை அறிந்து இன்னும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும். இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.