Published : 22 Apr 2022 04:26 AM
Last Updated : 22 Apr 2022 04:26 AM
சென்னை: ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத் தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர இருக்கும் மனிதர்களால்தான் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக மாற முடியும்.
ஒரு சமுதாயத்தின் வலிமை என்பது, அந்த சமுதாய மக்களுடைய மனரீதியான நலத்தையும், உடல்ரீதியான வலிமையையும் பொறுத்துள்ளது. அறிவு சக்தியைப் போன்றே, உடல் வலிமையும் ஒரு சொத்து. அத்தகைய உடல் வலிமையை அடைவதற்கு பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், விளையாட்டு என்பது அதில் மிகமிக முக்கியமானது.
விளையாட்டு என்பது உடலை உறுதிப்படுத்துகிறது. துடிப்போடு வைத்திருக்கிறது; மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகிறது. நேர்மை, ஒழுக்கத்தையும் விளையாட்டு கற்றுத் தருகிறது. வெற்றியோ, தோல்வியோ இரண்டும் ஒன்றுதான் என்ற மனப்பக்குவத்தையும் விளையாட்டு உருவாக்குகிறது. குழுவாக இணைந்து செயல்பட வேண்டுமென்ற கூட்டு மனப்பான்மையை உருவாக்கு கிறது.
விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதை மாணவர்களும், இளைஞர்களும் சீரிய முறையில் ஒருங்கிணைந்து பயன்படுத்திக் கொண்டால், தமிழகத்தின் இளைய ஆற்றல் எழுச்சி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழகம் பல ஆண்டுகளாக குழு போட்டிகளிலும், தனித்திறன் போட்டிகளிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னிலை வகித்து வருகிறது. அரசால் ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு கட்டமைப்பு, பயிற்சி வசதிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படக் கூடிய உயரிய ஊக்கத் தொகை ஆகியவைதான் இதற்கு அடிப்படை காரணங்கள்.
அந்த வகையில் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூட வசதியாக, உலகத் தரத்தில் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்த, சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும். இதன்மூலம் தமிழக வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சி பெற்று வெற்றி பெறுவர்.
ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, தமிழகத்தின் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
‘ஒலிம்பிக் தங்கம் தேடுதல்’ என்ற திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
குத்துச்சண்டை வளாகம்
வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டு திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில், வட சென்னையில் நவீன தொழில்நுட்பங்களுடன் குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். இங்கு வாலிபால், பேட்மிண்டன், பேஸ்கட்பால், குத்துச்சண்டை, கபடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக் கான வசதிகள், நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட் டுக்கென தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும். தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக, சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்த முயற்சிப்பதால், விளையாட்டு சார்ந்த பொருளாதாரம் உருவாகும். அந்த வகையில் சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழகம் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்களையும், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களையும் தமிழகம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை தமிழகத்தில் நடக்க உள்ளது. உலகமே வியக்கக்கூடிய வகையில் இந்தப் போட்டி, தமிழக அரசால் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்குபெற உள்ளனர். இப்போட்டியை நடத்துவதற்கு தனியாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சியும் சுற்றுலா வளர்ச்சியும் ஏற்படும்.
அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவமாக இத்தகைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் இளைய சக்தியை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த இந்த அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு களை செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT