Published : 22 Apr 2022 06:23 AM
Last Updated : 22 Apr 2022 06:23 AM
சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் (அதிமுக), ‘‘ஏழைப் பெண்களுக்காக அதிமுக அரசு கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது’’ என்றார். இதையடுத்து ஏற்பட்ட விவாதம்:
முதல்வர் ஸ்டாலின்: தாலிக்குத் தங்கம் திட்டம் மோசம் என்றுகூறி, நாங்கள் அதை மாற்றவில்லை. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, நீங்கள் நியமித்த அதிகாரிகளைக் கொண்டே அந்த திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு திட்டத்தை அறிவிக்கும். அந்த திட்டம் நன்றாக இருந்தால், அது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இப்போது நீங்கள் அறிவித்துள்ள திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம். அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குச் சிந்தனையுடன் கொண்டுவந்த திட்டத்தில் குறைபாடு இருந்தால் அவற்றை நீக்கி, அதை தொடரச் செய்ய வேண்டும்.
முதல்வர்: குறைபாடு உள்ள காரணத்தால்தான் அந்த திட்டத்தை மாற்றியுள்ளோம். திருமணம் முடிந்து, குழந்தை பெற்று 5 ஆண்டுகளாகியும், உதவித்தொகை பயனாளிகளை சென்றுசேரவில்லை. அதனால்தான் அந்த திட்டத்தை சீர்செய்துள்ளோம். வேறு எந்த கெட்ட நோக்கமும் இல்லை.
திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களில் எதையெல்லாம் நீங்கள் மாற்றினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட ஓமந்தூரார் கட்டிடத்தை மாற்றினீர்கள். அதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. இருந்தாலும் ஜனநாயக முறைப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். திட்டம் மோசம் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் செய்தவற்றை நாங்களும் சொல்ல வேண்டியிருக்கும்.
பேரவைத் தலைவர் அப்பாவு : பெண்களின் கல்விக்காகத்தான் அந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதும் பெண்களின் கல்விக்காகத்தான் இந்த திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்: திருமணஉதவித்தொகைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்பவர்கள் ஏழைகள். அவர்களின் குடும்பச் சூழலை, பொருளாதார நிலையை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நிலைக்கு இந்த அரசுக்கு வர வேண்டும்.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: தாலிக்கு தங்கம் திட்டத்தை நானே பல இடங்களில் பாராட்டிப் பேசியிருக்கிறேன்.
படித்தால் திருமண உதவித்தொகை என்பதற்குப் பதில், நீங்கள் கல்வி பெறுவதற்கே நாங்கள் உதவித்தொகை கொடுக்கிறோம் என்பதுதானே சிறப்பானதிட்டம். இந்த திட்டத்தை கல்லூரி மாணவர்கள் பாராட்டினர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT