Published : 22 Apr 2022 07:20 AM
Last Updated : 22 Apr 2022 07:20 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏப்ரல் 29-ம் தேதி தேரோட்டம்

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) கொடியேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி, நேற்றுஅதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3 மணியளவில் கொடிமர மண்டபத்தை வந்தடைந்தார். தொடர்ந்து காலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்பு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

பின்னர் மாலை 6.30 மணிக்குநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்று அடைந்தார்.

அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். அங்கிருந்து இன்று (ஏப்.22) அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருவார்.

ஏப்.27-ம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்.29-ம் தேதி நடைபெறுகிறது. 30-ம் தேதி சப்தாவரணம், மே 1-ம் தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

முகூர்த்தக்கால்

சித்திரை தேர் திருவிழாவையொட்டி ரங்கம் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள தேரில் நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையொட்டி முகூர்த்தக்காலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சந்தனம் பூசி, மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைநடைபெற்றது. இதைத் தொடர்ந்துகாலை 9.45 மணிக்கு முகூர்த்தக்காலை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x