Published : 22 Apr 2022 07:25 AM
Last Updated : 22 Apr 2022 07:25 AM
திருச்சி: நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார் என்றும், அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் எனவும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், எம்பி-யுமான டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டின் மீது பற்று கொண்டவர்களாக காந்தி உள்ளிட்டோர் திகழ்ந்தனர். இப்போது பிரதமர் மோடி அவ்வாறு திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவை தலைநிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துவரும் பெருமகன் அவர்.
சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி எதிரி அல்ல. தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரிபோல கட்டமைத்துள்ளனர். அந்த கட்டமைப்பு நீண்ட காலம் நிலைக்காது. இதே தமிழகம் பிரதமர் மோடியை நேசிக்கும், பாராட்டும் காலம் வரும்.
எந்தவொரு போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் கல்வி மாறுபட்டால், போட்டித் தேர்வு எழுதும்போது கோட்டை விட்டுவிடுகிறோம். அதைத்தான் நீட் தேர்வில் சந்தித்து வருகிறோம். எந்தவொரு கொள்கையாக இருந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு வலிமை சேர்ப்பதாக, பயனுள்ளதாக இருக்கும் என்றால், அது சற்று கடினமாக இருந்தாலும் ஏற்க வேண்டும். போட்டித் தேர்வு மட்டுமே சமூக நீதியைப் பாதுகாக்கும் என்றார்.
அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சத்தியநாதன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், மாநிலப் பொருளாளர் டிஎஸ்பிகே.ராஜூ உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT