

மதுரை: பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூரில் தையல் கடை நடத்தியவர் ராஜீவ் காந்தி. இவர், தையல் பயிற்சி பெற வந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்தார். இதுதொடர்பாக ராஜீவ் காந்தியை மாத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், ராஜீவ் காந்திக்கு கடத்தல் பிரிவில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், போக்ஸோ பிரிவில் ஆயுள் சிறைத் தண்டனையும் வழங்கி 5.5.2021-ல் தீர்ப்பளித்தது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி ராஜீவ் காந்தி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சிவசுப்பிரமணியம் வாதிட்டார்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விசாரணையின்போது மனுதாரரின் வழக்கறிஞர் கூறுகையில், தமிழகத்தில் பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த மருத்துவப் பரிசோதனை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பல்வேறு மாநிலங்களில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் 10.4.2022-ல்வெளியான கட்டுரையில் பாலியல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த மருத்துவப் பரிசோதனைகள் அமல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எனவே, இரு விரல் பரிசோதனைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக கருதுகிறோம். பாலியல் வழக்குகளில் குறிப்பாக இளம் வயதினர் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை அமலில் உள்ளது. இந்த சோதனை தனியுரிமை மீறல் என 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, இரு விரல் பரிசோதனை தொடர்வதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உடனடியாக இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை பாலியல் குற்றத்துக்காக மனுதாரருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனை, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாக மாற்றப்படுகிறது. சிறுமியை கடத்தியது தொடர்பாக வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.