மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் களத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பஞ்சு: மழையில் நனையும் என பருத்தி விவசாயிகள் கவலை
திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் கொண்டுசென்றபஞ்சு, 3-ல் ஒரு பங்கு போதியஇடவசதி இருந்தும் களத்தில்குவித்துவைக்கப்பட்டிருப்பது, விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள்கூறும்போது, "மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஏலம் நடைபெறும். இதற்காக விவசாயிகள் கொண்டு செல்லும் பஞ்சை களத்தில் போட்டு வைத்துள்ளனர். கோடை மழை பெய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால், நாங்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு பஞ்சை எடுத்து வந்து 3 நாட்களுக்கு பிறகுதான் ஏலம் நடைபெறுகிறது. மழை வந்தால் களத்தில் இருக்கும் பஞ்சு வீணாகும். களத்தில் போதிய வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல, பணப் பட்டுவாடா வங்கிகளுக்கு வர 2 வாரங்களாவதால், மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்துள்ளோம். மழையில் பஞ்சு நனைந்தால், அதன் மதிப்பு குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு முறை பஞ்சை கொண்டுவரும்போதும், காத்திருக்க வைக்காமல் விவசாய பொருளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றனர்.
