Published : 22 Apr 2022 06:28 AM
Last Updated : 22 Apr 2022 06:28 AM

போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் சின்ன வெங்காயத்தை வயலிலேயே அழிக்கும் விவசாயிகள்: பல்லடம் வட்டாரத்தில் தொடரும் அவலம்

திருப்பூர்: போதிய விலை கிடைக்காததால், பல்லடம் பகுதியில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யாமல் வயலிலேயே அழித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காதசூழல் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நிலவுகிறது. இதனால், சின்ன வெங்காயத்தை அதிக அளவில் பயிரிட்டுள்ள பல்லடம், பொங்கலூர் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், விளைந்தவெங்காயத்தை அறுவடை செய்வதற்கு பதிலாக வயல்களிலேயே அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பல்லடம் அடுத்த குள்ளம்பாளையம் பகுதியில் சின்ன வெங்காய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி சரண் கூறியதாவது: சின்ன வெங்காயம் 1 ஏக்கரில் பயிரிட்டால், ரூ.1 லட்சம்முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. உரம், மருந்து பொருட்கள் விலை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளால், விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். பருவம் தவறிய மழையால் 1 ஏக்கருக்கு 10 டன்னுக்கு பதிலாக 6 டன் வெங்காயம்தான் கிடைக்கிறது.

விலை இல்லாத நிலையில், போதிய விளைச்சலும் இல்லை. இன்றைக்கு கிலோ ரூ.7 முதல்ரூ.8-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை கட்டுப்படியாகாததால், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் பலரும் இயந்திரங்களைக் கொண்டு வயல்களிலேயே வெங்காய பயிரைஅழிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர். சிலர் வெங்காயத்தை நவீன இயந்திரம் கொண்டு நறுக்கி விடுகிறார்கள். இதனால் விளைந்த வெங்காயம் மண்ணுக்கு உரமாகிறது. வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ரூ.30-க்கு கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் விவசாயிகளை காக்க வேண்டும். வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை இருப்பு வைக்க குளிர்பதனக் கிடங்கு மற்றும் ஏற்றுமதி செய்யவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவர் கூறும்போது, "அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். உற்பத்தி செய்ய அரசு தரப்பில் ஊக்கப்படுத்துகிறார்கள். விலை கிடைக்காதபோது அதற்குரிய விலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x