

சென்னை: சென்னை அண்ணா நூலகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொடங்கிவைத்தார். வரும் 27-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
இளம் தலைமுறையினரிடம் திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தீராக்காதல் திருக்குறள்’ என்ற பெயரில், ரூ.2 கோடியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி, தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. இதில் 12 ஆயிரம் மாணவர்கள், திருக்குறள் கருத்துகளை மையப்படுத்திய ஓவியங்களை சமர்பித்தனர்.
அதிலிருந்து சிறந்த 365 ஓவியங்களைத் தேர்வு செய்து, திருக்குறள் மேஜை நாட்காட்டியை (காலண்டர்) தமிழ் இணையக் கல்விக் கழகம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டியை எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்த ஏதுவாக, ஆங்கிலத் தேதி மட்டும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, குறளோவியப் போட்டியில் தேர்வான சிறந்த 365 ஓவியங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான கண்காட்சி, தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் தமிழக பாடநூல் கழகம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இக்கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, நடிகர் சிவக்குமார் எழுதிய ‘திருக்குறள்-50’ என்ற நூலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ், பரிசுத்தொகையை வழங்கினர்.
இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, ‘‘மறைந்த முதல்வர் கருணாநிதிதான், திருவள்ளுவருக்குப் பெருமை சேர்த்தார். சென்னையில் வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையும் அவர் ஆட்சியில்தான் அமைக்கப்பட்டன. திருக்குறளுக்கு இணையான அறநெறி நூல் உலகில் எதுவும் இல்லை’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநர் து.மணிகண்டன், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள ஓவியக் கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் இலவசமாகப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள ஓவியக் கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பார்வையிடலாம்