

சென்னை: மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்காக சாலையை ஒப்படைப்பதற்கான தடையில்லா சான்றிதழ் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் அல்கா உபாத்யாயாவுக்கு இறையன்பு எழுதிய கடிதம்:
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை 332ஏ ஒப்படைப்பதற்கான தடையில்லாச் சான்றிதழ் தொடர்பான கடிதம் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மேற்சொன்ன நெடுஞ்சாலையை ஒப்படைப்பதற்கு தமிழக அரசு முன்வரவில்லை என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கருதுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதுதொடர்பாக இந்திய அரசு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட 7-3-2022 நாளிட்ட எனது நேர்முக கடிதத்தில் கடன்கள் காரணமாக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சாலை சொத்துக்களை விடுவித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான வழிமுறையை மாநில அரசு செயல்படுத்தி வருவதாக நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். மேலும் இதனை ஒப்படைப்பதால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு செயலர் 13-1-2022 நாளிட்ட அவருடைய கடிதத்தின் மூலம், இந்த சாலைக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் அளிப்பதற்கான விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் இதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மேலும் சிறிதுகாலம் தேவைப்படும் என்றும் சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் நெடுஞ்சாலைகள் துறையின் அரசு செயலர் தங்களை கடந்த மாதம் 31-ம் தேதி டெல்லியில் சந்தித்து மாநில அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவித்ததுடன் தடையில்லாச் சான்றிதழ் சுமார் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரியிடம் இதுகுறித்து அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார்.
எனவே, தமிழக அரசிடம் எந்த பதிலும் இல்லை என்று மேற்சொன்ன சாலையை ஒப்படைப்பதற்கு மாநில அரசு முன்வரவில்லை என்று தெரிவிக்கும் உங்களின் அறிக்கை எனக்கு வியப்பளிக்கிறது. இந்த விவகாரத்தில் மேற்சொன்ன சாலையை ஒப்படைப்பதற்கான தடையில்லாச் சான்றிதழ் தொடர்பான அரசாணை கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒப்படைக்கப்பட்ட சாலையின் விரிவாக்கப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான விவகாரங்களில் தீர்வு காண தேவையான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை அறிவீர்கள். மேற்சொன்ன விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒருங்கிணைப்பை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கடிதத்தில் இறையன்பு தெரிவித்துள்ளார்.