

சென்னை: தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திப மகாராஜன் (58) மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளரான ரெ.பார்த்திப மகாராஜன், தினமலர் திருச்சி, வேலூர் பதிப்புகளின் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். உடல் நலக்குறைவால் மதுரையில் நேற்று காலமானார். அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ரேவதி என்ற மனைவியும், காவ்யா என்ற மகளும் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், ‘‘ஊடகத்துறையில் 30 ஆண்டுகாலம் பணியாற்றிய தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திப மகாராஜன், மரணம் அடைந்தார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘பார்த்திப மகாராஜன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். பார்த்திபன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிதியுதவியை வழங்க வேண்டும்’’ என தெரவித்துள்ளார்.
இதேபோல், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.