Published : 22 Apr 2022 07:10 AM
Last Updated : 22 Apr 2022 07:10 AM

நீர்வழி பாதையை ஆக்கிரமித்து சாலை அமைப்பு அகற்ற முயன்ற அதிகாரிகளை மிரட்டிய திமுகவினர்

வண்டலூர்: வண்டலூர் அருகே ஊரப்பாக்கத்தில் கிளாம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேறி மண்ணிவாக்கம் ஏரிக்கு செல்லும்.அவ்வாறு நீர் செல்லும் பாதையை உள்ளூரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கற்களைகொட்டி சாலை அமைத்துள்ளனர்.

தகவலறிந்த செங்கல்பட்டு நீர்வள ஆதார துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நீர்வள ஆதார துறையினர் கூறியதாவது: உள்ளூரைச் சேர்ந்த சிலர் கிளாம்பாக்கம் ஏரிக்கரையின் உபரிநீர் வெளியேறும் கலங்கல் பகுதியை சேதப்படுத்தி கட்டிடக் கழிவுகளை கொண்டு சாலை அமைத்துள்ளனர் என புகார் வந்தது.

அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்பட்டது உறுதியானது. எனவே, நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது உள்ளூரைச் சேர்ந்த திமுகவினர் சிலர் எங்களை மிரட்டினர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் தடுத்து மிரட்டுவது வேதனையாக உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x