

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளின் ஓரத்தில் பழங்கள், காய்கறி, விவசாய விளை பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், துடைப்பம் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சுங்கக் கட்டணம் நிர்ணயித்து, நாள்தோறும் ரூ. 40 வரை ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் நெருக்கடி, துப்புரவு பணியாளர்களின் நெருக்கடி மற்றும் சில அரசியல் கட்சியினரின் மாமூல் என பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சாலையோர எளிய வியாபாரிகளின் மீது இந்த சுங்க கட்டணமும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது, ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.10 சேர்த்தே வாங்குவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சுங்கக் கட்டணத்தை திருத்தி வசூலிக்க வேண்டும் என்று இப்பகுதி சாலையோர வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரித்து அதன் பின் முடிவுசெய்யப்படும் என்றார்.