Published : 03 May 2016 04:07 PM
Last Updated : 03 May 2016 04:07 PM

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும். ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் இந்த வெப்பநிலை அதிகரிக்கும்.

கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையைப் பொறுத்து வெப்பநிலை மாறுபடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் 10 நாட்களுக்கு 2-6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கிறது.

சூரிய ஒளி கூர்மை அடைந்து வெப்பம் அதிகரிக்கும் அந்த குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்தரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

முதல் 7 நாட்கள் வெப்பம் ஏறுமுகமாகவும், நடுவில் உள்ள 7 நாட்கள் வெப்பத் தாக்குதல் கடுமையாகவும், மூன்றாவது 7 நாட்கள் வெப்பம் இறங்குமுகமாகவும் இருக்கும். இதனை உணர்வுபூர்வமாகவே அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x