

சென்னை: ஆவின் நூடுல்ஸ் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கு 'உங்கள் சூப்பர் மார்க்கெட் சார்பில் ஆர்டர் கொடுத்தால் தயாரித்து வழங்குகிறோம்' என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்தார். அமைச்சரின் ருசிகர பதில் அனைவரிடமும் புன்னகையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
முன்னதாக, இன்றைய கேள்வி நேரத்தின்போது விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, "ஆவின் நுடுல்ஸ் பல இடங்களில் கிடைப்பதில்லை. எனவே அது அதிகமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா" என்ற கேள்வி எழுப்பினார்.
அப்போது, பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, "உறுப்பினர் பிரபாகர் ராஜா, வியாபாரிகள் சங்கத் தலைவர் மகன் என்பதால் வியாபாரம் தொடர்பாகக் கேட்கிறார்" என்று தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்குப் பதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், "ஆவின் நூடுல்ஸ் அண்மையில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தேவைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டுவருகிறது. அருமை நண்பர் அவரின் சூப்பர் மார்க்கெட் குழுவின் சார்பில் உத்தரவு அளித்தால் ஒட்டுமெத்தமாக தயாரித்து வழங்க தாயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.