Published : 21 Apr 2022 07:19 AM
Last Updated : 21 Apr 2022 07:19 AM

திருவான்மியூர், சோழிங்கநல்லூரில் ரூ.105 கோடியில் அடுக்குமாடி வீடுகள்: அமைச்சர் எஸ்.முத்துசாமி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி பேசியதாவது:

வீட்டுவசதி வாரியக் கட்டிடங்களின் தரத்தைப்பேண தனியார் கூட்டு முயற்சி திட்டத்தைசெயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 6 மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 6,323 பயனாளிகளுக்கு விற்பனைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சேட்டிலைட் சிட்டி எனப்படும் துணை நகரங்கள் அமைப்பது குறித்து ஆய்வுசெய்ய தலைமைச் செயலர் தலைமையில் குழுஅமைக்கப்படும். பட்டினம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பில் மெரினா வணிக வளாகம் நிறுவும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

வீட்டுவசதி வாரியத்தில் 1,800 பணியிடங்களும், சிஎம்டிஏ-வில் 288 பணியிடங்களும், டிடிசிபி-யில் 33 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் பணிகளைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் பி.பிளான். படிப்பு வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு சிஎம்டிஏ ரூ.10 கோடி நிதி வழங்கும்.

திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் நகரங்களுக்கு சிஎம்டிஏ மூலம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்படும். மதுரை தோப்பூர் உச்சப்பட்டி துணை நகரத்துக்கு டிடிசிபி மூலம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும்.

திருமழிசையில் 16.92 ஏக்கர் பரப்பில், ரூ.1,280 கோடியில் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும். பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10,000 அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்படும்.

சிஎம்டிஏ மூலம் மெரினா முதல் கோவளம் இடையேயான 30 கி.மீ. நீளமுள்ள கடற்கரைச் சாலை ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும். சென்னை பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல் ஆகிய ஏரிப் பகுதிகளில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் 2.6 ஏக்கர் பரப்பில், ரூ.133 கோடியில் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் கட்டப்படும்.

திருவான்மியூர், சோழிங்கநல்லூர் (ஓஎம்ஆர்), மாதவரத்தில் சுயநிதி திட்டத்தின்கீழ் 3.18 ஏக்கர்பரப்பில், ரூ.105 கோடியிலும், ஓசூரில் ரூ.59 கோடியிலும் குடியிருப்புகள் கட்டப்படும். வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில் ரூ.8 கோடியில் சர்வீசஸ் அபார்ட்மென்ட் கட்டப்படும். கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிகளை எளிதில் பெறும்வகையில், நகர் ஊரமைப்பு மாவட்ட அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x