Published : 21 Apr 2022 07:22 AM
Last Updated : 21 Apr 2022 07:22 AM
சென்னை: தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் தனது சொத்து விவரங்களை வேட்புமனுவில் மறைத்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் எம்.பி.யும், திமுக தேனிமாவட்டச் செயலருமான தங்கதமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.அத்தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தன்னை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரை வென்றார்.
இந்நிலையில், ரவீந்திரநாத்குமார் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் வங்கியில் பெற்ற ரூ. 10 கோடி கடன்ஆகியவற்றை மறைத்து, தேர்தல்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டுமெனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள முன்னாள் எம்.பி.யும், திமுக தேனி மாவட்டச் செயலருமான தங்க தமிழ்ச்செல்வன் நேற்று நீதிபதி முன்பாக ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வி.அருண், கூடுதல் அரசு வழக்கறிஞர் குமரவேல் ஆகியோர் ஆஜராகினர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
ரவீந்திரநாத்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் கவுதமன், ராஜலட்சுமி, பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி, தேர்தலில் தோல்வியடைந்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தங்க தமிழ்ச்செல்வன் சாட்சியம் அளிப்பதாக குறுக்கு விசாரணை நடத்தினர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன், “தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரணமாக இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கவில்லை. ரவீந்திரநாத்குமார் தனது சொத்து விவரங்களையும், வங்கியில் பெற்றுள்ள கடன் விவரங்களையும் அப்பட்டமாக வேட்புமனுவில் மறைத்து தொகுதி மக்களை ஏமாற்றியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அப்போதே ஆட்சேபம் தெரிவித்து புகார்அளித்தேன். ஆனால், ரவீந்திரநாத்குமாரின் தந்தை ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி வகித்ததால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து விட்டார். தற்போது இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாட்சியம் அளிக்கிறேன்” என்றார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், வழக்கு விசாரணையை வரும் ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT