Published : 21 Apr 2022 07:53 AM
Last Updated : 21 Apr 2022 07:53 AM
திருச்சி: திருச்சியில் ரேஷன் கடையில் பாஜகவினர் வைத்த பிரதமர் மோடியின் படத்தை திமுகவினர் கழற்றி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பொன்னகர் காமராஜர் புரத்தில் ரேஷன் கடைக்கு நேற்று காலை சென்ற பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையிலான நிர்வாகிகள், பிரதமர் மோடியின் படத்தை ரேஷன் கடையில் வைக்க வேண்டும் என்றனர். அதற்கு விற்பனையாளர் சுகுமார், எடையாளர் தாமோதரன் ஆகியோர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி பாஜகவினர் தாங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடியின் படத்தை சுவற்றில் மாட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு வந்து, ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திமுகவினர், சுவரில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தைக் கழற்றி, சாலையோரத்தில் தூக்கி வீசினர். இதில் மோடி படத்தின் கண்ணாடி உடைந்தது.
இதைக் கண்ட பாஜகவினர்திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்துபோலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள், இருதரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT