

“ராணுவத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய நிர்வாகக் குழு உறுப் பினர் நல்லகண்ணு வலியுறுத்தி யுள்ளார்.
நாகர்கோவிலில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி பதவியேற்ற அடுத்த நாளே, தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்தது. இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசின் வெளி யுறவுத் துறை அமைச்சர், `இலங் கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது’ என அறிக்கை வெளியிட்டு இருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆணையம்
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்தித்தபோது, மீனவர் விவகாரம் உள்ளிட்ட 68 பிரச்சினைகள் சம்பந்தமாக மனு கொடுத்துள்ளார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் வாக்குறுதி கொடுத்துள்ளார். அரசிதழில் வெளியிட்ட பின்பும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதை அமைப்பது மத்திய அரசின் பொறுப்பு.
வாடும் விவசாயிகள்
ஏற்கெனவே கடந்த 2 ஆண்டாக காவிரி தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தாண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும்.
மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது கண்டனத்துக் குரியது. ராணுவத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் இணையுமா?
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்திய அளவில் மத்திய குழுவை கூட்டி ஆலோசனை நடத்தி உள்ளோம். ஜனநாயகத்துக்கு விரோதமாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரை அறிவித்து களம் கண்டது.
பா.ஜ.க. முகாமுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் உதவின. இது குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மக்கள் பிரச்சினைகளுக்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளையும் இணைப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம். தீவிரமாக விவாதித்த பின் இது பற்றி முடிவு செய்யப்படும் என்றார் நல்லகண்ணு.