

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ளதால், ஆண்டின் முதல்போகத்துக்கான விதைப்புப் பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதன் காரணமாக இரவு நேர தட்ப வெப்பநிலை நகரப் பகுதிகளில் 4 டிகிரிசெல்சியஸ் ஆகவும், தாழ்வானபகுதிகளில் 2 டிகிரியாகவும் குறைந்தது.
உதகை, குன்னூர், ஜெகதளா, காரக்கொரை, மல்லிக்கொரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை மற்றும் மலைக் காய்கறிகளான காரட், பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்கள் பனியின் தாக்கத்தால் கருகின. தேயிலைச் செடிகள் கருகி உள்ளதால், வரத்து குறைந்து தேயிலைத் தூள் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வரத்து குறைந்ததால், தேயிலையின் விலை அதிகரித்தது. இம்மாதம்பசுந்தேயிலை விலை கிலோவுக்குரூ.14 - என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.20 வழங்கப்பட்டு வருகிறது.
விதைப்புப் பணிகள் மும்முரம்
தற்போது பனிக்காலம் நிறைவடைந்துள்ளதால், உதகை அருகே காய்கறி விவசாய நிலங்கள் அதிகம் உள்ள நஞ்சநாடு, கப்பத்தொரை, முத்தொரை, பாலாடா பகுதிகளில் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
முத்தநாடு மந்தை சேர்ந்தவிவசாயிகள் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் பனிக்காலத்தில் எங்கள் நிலத்தை பதப்படுத்திவைத்துக்கொள்வோம்.
பனிக்காலம் முடிவடைந்ததுமே விவசாயப் பணிகள் தொடங்குவோம். பனிக்காலத்தில் நிலத்தை உழும்போது, நிலத்தில் ஈர தன்மையில்லாமல் நிலத்தில் வெடிப்பு ஏற்படும். இந்த காலத்தில் நிலத்தின் வெடிப்பினுள் பனி சென்று, நிலத்தில் உள்ள பூச்சிகள் வெளியே வந்து விடும். இதனால் பயிரிடப்படும் பயிர்கள் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாமல் செழிப்பாக வளரும். தற்போது, பனிப்பொழிவு குறைந்துள்ளதால், முதல் போகத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றனர்.