

கோவை: வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைனில் பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெறும் வசதியை எப்படி பயன்படுத்துவது என போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
18 வயது பூர்த்தியானவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பு பழகுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். முன்பு, நேரில் விண்ணப்பித்தால் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த எல்எல்ஆர், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளத்தில் முதலில் மாநிலத்தை தேர்வு செய்து, பழகுநர் உரிமத்துக்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து, ஆதாரில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ‘பாஸ்வேர்டு' வரும். அதைக் குறிப்பிட்டால், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம்தான் பழகுநர் உரிமத்திலும் இடம்பெறும். அதன்பிறகு, கல்வித்தகுதி, செல்போன் எண், கியர் உள்ள அல்லது கியர் இல்லாத வாகனம் என எந்த வாகனத்துக்காக பழகுநர் உரிமம் பெறுகிறோம், முகவரி விவரம், ஒருவேளை ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பமா, இல்லையா, சுய உடல் தகுதி சான்று ஆகியவற்றை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் மருத்துவ சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகு, 12 நிமிடங்கள் கொண்ட வீடியோ வரும். அதை கட்டாயம் முழுமையாக பார்க்க வேண்டும். தொடர்ந்து, ஆன்லைனில் 10 கேள்விகள் கொண்ட தேர்வு நடத்தப்படும். அதில், 6 கேள்விகளுக்கு சரியான விடை அளித்தால் எல்எல்ஆர் வந்துவிடும். அதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
இதற்கு ஆன்லைனில் ரூ.230 கட்டணமாக செலுத்த வேண்டும். 6 மாதங்கள் இந்த எல்எல்ஆர் செல்லுபடியாகும். இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்துதுறை அலுவலர்கள், விண்ணப்பதாரர்கள் ஆகிய இருவருக்கும் நேரம் மிச்சமாகிறது. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே இந்த திட்டத்துக்கு வரவேற்பு உள்ளது. ஆன்லைனில் எல்எல்ஆர் பெற ஆதார் அட்டை விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். எல்எல்ஆர் பெற்ற பிறகு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கட்டாயம் நேரில் வர வேண்டும். இதுதவிர, ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு ஆகியவற்றையும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.