

தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட 230 பேர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, புதன்கிழமை காலை மரணமடைந்த அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 16-ம் தேதி நடந்தது. பணப் பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால் மற்ற 232 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டன. அதிமுக 134 இடங்களிலும் திமுக 89 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஒருவரும் பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
பெரும்பான்மை பலத்துடன் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, கடந்த 23-ம் தேதி நடந்தது. ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. காலை 10.30 மணிக்கு முன்னதாகவே அதிமுக, திமுகவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வந்துவிட்டனர். 10.45 மணிக்கு பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். 10.48 மணிக்கு சட்டப் பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி அவரை வரவேற்றனர். காலை 10.53 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா அவையினுள் நுழைந்தார். அதிமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரத்துடன் முதல்வரை வரவேற்றனர்.
முதல்வர் தனது இருக்கையில் அமர்ந்தவுடன் அவருக்கு மு.க. ஸ்டாலின் வணக்கம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவும் ஸ்டாலினுக்கு பதில் வணக்கம் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்கள் அவை மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. சரியாக 11 மணிக்கு பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை அவைக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைவரும் எழுந்து நின்று அவ ருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
திருக்குறள் ஒன்றை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கிய செம்மலை, 1984-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்ற வரலாற்றுச் சாதனையை முதல்வர் ஜெயலலிதா நிகழ்த்தியிருப்பதாகக் கூறி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை மரணமடைந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல் ஏ எஸ்.எம்.சீனிவேல் மறைவுக்கு அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு
அதன்பிறகு எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. ‘‘பேரவையின் உறுப்பினர்களாக பதவியேற்கும் நிகழ்வு மிகவும் புனிதமானது. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்வின்போது மிகவும் அமைதி யாக நடந்து கொள்ள வேண்டுகிறேன்’’ என்று பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்டார். பேரவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே, உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழிப் படிவத்தை வாசித்து, பதவியேற்றுக் கொண்டனர்.
முதல் உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா காலை 11.09 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உட்பட 28 அமைச்சர்களும் பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு அரசியல் கட்சிகளின் சட்டப்பேரவை குழுத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். முதலில் சட்டப்பேரவை திமுக குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முகமது அபுபக்கர் பதவியேற்றார். பேரவையின் முன்னாள் தலைவர் ப.தனபால், முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்றனர்.
இதற்கிடையே, காலை 11.32 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்தார். அப்போது உறுப்பினர் அபுபக்கர் உறுதிமொழி படிவத்தை வாசித்துக் கொண்டிருந்தார். கருணாநிதி வந்த சற்று நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னாள் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு முடிந்தவுடன் முன்னாள் முதல்வர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி காலை 11.35 மணிக்கு பதவியேற்க அழைக்கப்பட்டார். அவர் தனது சக்கர நாற்காலி இருக்கையில் அமர்ந்தபடியே உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 11.38 மணிக்கு அவர் அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்பட்டனர். முதலில் திமுகவின் தா.மோ. அன்பரசன் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக, திமுகவைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்பிறகு அவையின் மற்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.
வெற்றி பெற்ற 232 பேரில், செம்மலை (மேட்டூர்), தற்காலிக பேரவைத் தலைவராக பதவி யேற்றுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்துவிட்டார். அதனால், மற்ற 230 எம்எல்ஏக்களும் புதன்கிழமை ஒரே நாளில் பதவியேற்றுக் கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய அவை நிகழ்வுகள் பிற்பகல் 2.22 மணிக்கு நிறை வடைந்தன. அதைத் தொடர்ந்து அவையை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.