

சென்னை: ஒரு சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றும்போது வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் ஏற்கெனவே இறந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15-ந்தேதி அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டரில் உள்ள வாரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் முகமது மீரான் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவரது மனைவி அஸ்மத் (25), அவரது தந்தை காஜா மொய்தீன் (70), உறவினர் பாத்திமா (32) மற்றும் அவரிடம் வேலைப்பார்த்து வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் (30) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த முகமது மீரானின் தந்தை காஜா மொய்தீன், கடந்த 16-ந்தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சையில் இருந்த வந்த ஓட்டுநர் தினேசும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்களில் இருந்து வணிக சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி நிரப்பிக் கொண்டிருந்த போது எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.