Published : 21 Apr 2022 06:18 AM
Last Updated : 21 Apr 2022 06:18 AM
சென்னை: மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியினால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் குறித்து போலி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டாம் என்று வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசின் முதல்வர் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீத நிதியுதவி மற்றும் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 சதவீத நிதியுதவியுடன் மொத்தம் 70 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் 10 குதிரைத்திறன் வரையிலான பம்புசெட்டுகள் தரப்படுகின்றன.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான போர்ட்டல் வலைதளங்கள் என்று பொய்யான சில மோசடி இணையதளங்கள் மூலம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து பணம் மற்றும் தகவல்களை சேகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு என எந்தவொரு பதிவுக் கட்டணத்தையும் டெபாசிட் செய்யவோ அல்லது பொய்யான வலைதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் மீதான புகார்களைப் பெற்றவுடன் தவறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல போலிப் பதிவு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் அமைத்துத் தருவதாக போலி இணையதளங்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் பயனாளிகளை தவறாக வழி நடத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
இத்திட்டத்துக்கான பதிவு போர்ட்டல் எனக் கூறும் வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சரிபார்க்கப்படாத அல்லது சந்தேகத்துக்குரிய இணையதளத்துக்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையதளம் www.mnre.gov.in மற்றும் மாநில அரசின் இணையதளம் https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://www.aed.tn.gov.in மூலம் மட்டுமே பதிவு மற்றும் திட்டம் பற்றிய தகவல்களுக்கு அணுக வேண்டும். இத்திட்டம் குறித்த தகவலுக்கு https://pmkusum.mnre.gov.in – ஐ பார்வையிடலாம். அல்லது டோல் டயல் செய்வதற்கான இலவச எண் 18001803333 என்ற எண்ணில் டயல் செய்யலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT