Published : 21 Apr 2022 06:21 AM
Last Updated : 21 Apr 2022 06:21 AM
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் நொச்சிக்குப்பம் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நொச்சிக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், புதிதாக 1,188 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் பகுதி மீனவ மக்களுக்கு வழங்க வேண்டும்.
இக்குடியிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு இழந்து சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் அவதிப்பட்டு வரும் நொச்சிக்குப்பம் குடிசை பகுதியைச் சேர்ந்த 216 மீனவ குடும்பங்களை உடனடியாக குடியேற்ற வேண்டும். நொச்சிக்குப்பம் விரிவடைந்த குடும்பங்களுக்கு கட்டப்பட்டு வரும் 756 குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணையை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் 216 குடியிருப்புகளை டுமிங்குப்பம் மக்களுக்கு வழங்கியபோது மயிலை தொகுதி எம்எல்ஏ த.வேலு வாக்குறுதி அளித்தது போல் டுமிங்குப்பம் பகுதி மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பில் நொச்சிக்குப்பம் பகுதி மக்களுக்கு 216 குடியிருப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை, நொச்சிக் குப்பம், நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 18-ம் தேதி தொடங்கினர்.
மயிலை நொச்சிக் குப்பம் மீனவ கிராம சபை தலைவர் ரூபேஷ், பொருளாளர் ரவி, துணை செயலாளர் கு.பாரதி, நிர்வாகி ஜே.அன்புரோஸ் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 3-வது நாளாக நேற்றும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து, மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை துணை செயலாளர் கு.பாரதி கூறும்போது, 'நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்காக 1,188 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இவற்றை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மீனவர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக மேலாண்மை இயக்குநர் உறுதியளித்தார்.இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT