Published : 21 Apr 2022 07:10 AM
Last Updated : 21 Apr 2022 07:10 AM

கோஷ்டி பூசலால் தாம்பரம் மாநகராட்சியில் மேயர் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை என புகார்: டெண்டர், ஆள்பற்றாக்குறையால் பணிகள் தாமதம் என மேயர் விளக்கம்

தாம்பரம்: பொது மக்களிடமிருந்து வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உத்தரவை மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து, தாம்பரம் மாநகராட்சிக்கு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி பகுதிகளில் உள்ளகுடியிருப்போர் நலச் சங்கத்தினர், மக்கள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சியினர், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் பகுதி அடிப்படைப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவரிடம் மனு அளித்து வருகின்றனர்.

அவ்வாறு வரும் மனுக்களை மேயர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார். ஆனால், அதிகாரிகள் மேயரின் உத்தரவைகடைபிடிக்காமல், ‘ஆணையர்எங்களுக்கு உத்தரவிடவில்லை'எனக்கூறி அந்த மனுக்களைக்கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், மேயரின் உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் சிலர்கூறும்போது, ‘‘திமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக மேயர், துணை மேயர் பதவிகளில் தங்களுக்கு வேண்டியவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், மேயர் சொல்லும் பணிகளைச் செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எளிதாகச் செய்யக்கூடிய பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்கிறோம். இதனால் பல அதிகாரிகள் வேறுஇடங்களுக்குப் பணி மாறுதல் கேட்டு மனு அளித்து வருகின்றனர். அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியிடம் கேட்டபோது, "பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பிநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்களின் முக்கிய தேவையான குடிநீர், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு போன்ற பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி செய்கிறோம். மற்ற பணிகள் டெண்டர் நடைமுறைகள் இருப்பதால் சற்று காலதாமதம் ஆகிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். பணியாளர்கள், அலுவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் பணிகள் காலதாமதம் ஆகின்றன. கோஷ்டிப் பூசல் எதுவுமில்லை. அதிகாரிகள் முழு ஒத்துழைப்பைத் தருகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x