Published : 21 Apr 2022 06:56 AM
Last Updated : 21 Apr 2022 06:56 AM
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி அரபாத் ஏரி உள்ளது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் சுருங்கி, தற்போது 32 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதனைச் சுற்றியுள்ள மணிகண்டபுரம், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அரபாத் ஏரி, கடந்த சில ஆண்டுகளாக மாசடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த, தேசியபசுமை தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி. ஜோதிமணி, அரபாத் ஏரியை தூய்மைப்படுத்தவேண்டும் என ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, தனியார்நிறுவனங்களின் சமூக பங்களிப்புநிதியில், சுமார் 30 லட்சம் ரூபாய்மதிப்பில் அரபாத் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் கடந்த 20 நாட்களாக நடைபெறுகின்றது.
இந்நிலையில், அரபாத் ஏரியைதூய்மைப்படுத்தும் பணியை நேற்று ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர், ஏரியில் படகில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது, “அரபாத்ஏரியை தூய்மைப்படுத்துவதோடு, அதனை ஆழப்படுத்தி, மின்விளக்குகளுடன் நடைப்பாதை மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆவடியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, அதில் கழிவுநீர் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படும்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT