

சென்னை: ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம் என, பயணிகளுக்கு ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் முடிவு செய்துள்ளது.
ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால், ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். கடந்த 2021-22-ம் ஆண்டு ரயில் தண்டவாளங்களை அத்துமீறி கடந்து சென்றது தொடர்பாக 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
200 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் அல்லது படுகாயம் அடைந்துள்ளனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி கடப்பவர்கள், செல்ஃபிஎடுப்பவர்கள், வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக ரயில்பயணிகள் மத்தியில் தொடர்விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். எனவே, பயணிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதையும், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.