Published : 21 May 2016 09:12 PM
Last Updated : 21 May 2016 09:12 PM

2 தொகுதிகளில் மட்டும்தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? - தேர்தல் ஒத்திவைப்பு குறித்து கருணாநிதி கேள்வி

தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் பணப் பட்டுவாடா நடைபெற்றிருக்க தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பது என்ன நியாயம் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து திமுகவும், பிற கட்சியினரும் தொடர்ந்து முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர். இதுபற்றி, தனியாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால் பல உண்மைகளை தெரிந்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தது தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா என்ன?. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல் நடைபெற்றிருக்கின்றன. எந்த தேர்தலிலாவது இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மொத்தம் ரூ.133 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறதா இல்லையா?. பணப் பட்டுவாடா நடைபெற்றதற்காக தேர்தலை ஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைத்திருக்க வேண்டும். ஆனால், 2 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.

தற்போது அதையும் தாண்டி, பாஜக, பாமக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது என்பதற்காக, தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்கு தேர்தலை ஒத்திவைப்பபது என்ன நியாயம்?. இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கும் வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x