

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வீதிகளில் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த கேரள பெண்ணை மீட்டு குணப்படுத்தி, 9 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் குளத்திபுழாவைச் சேர்ந்தவர் நாச்சிலா உசைபா (52). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இந்நிலையில் அவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வீதிகளில் சுற்றி திரிந்தார். அக்கம், பக்கத்தினர் அவருக்கு உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அப்பெண்ணை போலீஸார் உதவியுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
அவர் முழுமையாக குணமடைந்த நிலையில், தனது குடும்பத்தார் குறித்த விவரத்தை மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது மகள் அமீனா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நாச்சிலா உசைபாவை நேற்று அழைத்துச் சென்றனர். மேலும் தனது தாயாரை 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டு, குணப்படுத்தி கொடுத்த சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன் மற்றும் மருத்துவர்களுக்கு அமீனா நன்றி தெரிவித்தார்.