

ஆப்கனில் தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசியதாகவும், கடிதம் மூலமும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பத்திரமாக தாயகம் திரும்புவார் என தான் நம்புவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்த கேள்விக்கு, தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கமுடியாது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரே இலங்கை சிறையில் இருந்த 33 தமிழக மீனவர்கள் விடுதலையாவதை பாஜக உறுதி செய்தது என்றார்.
மேலும், மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 7 படகுகளையும் விரைவில் மீட்கப்படும். அதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது, மத்திய அரசு இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டும் என தெரிவித்தார்.
தோழமை கட்சிகளுடன் அதிருப்தி இல்லை:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே அதிருப்தி நிலவுவதாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அதை திட்டவட்டமாக மறுத்தார் பொன். ராதாகிருஷ்ணன். மேலும், சில விஷமிகள் வேண்டும் என்றே இவ்வாறு அவதூறு பரப்புவதாகவும் அவர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் கூறினார்.
முன்னதாக, மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக தமிழகம் வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சென்னை விமானநிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.