

நாகப்பட்டினம்: 3 படகுகளில் இருந்த 9 மீனவர்களை தாக்கி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை பனங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(46). இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், ஜீவன் ஆகிய 2 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசிய 5 பேரில், 4 பேர் ஆறுமுகத்தின் படகில் ஏறி, அவர்கள் கையில் வைத்திருந்த தூண்டில் கம்பால் ஆறுமுகத்தை தாக்கினர். பின்னர் படகில் இருந்த டீசல் கேன், மீன் வலை ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.
இதேபோல, ஆறுகாட்டுத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜனுக்கு சொந்தமான பைபர் படகில் சென்று நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த சங்கர் (48), மணியன் தீவைச் சேர்ந்த குமார் (60), தேத்தாக்குடி தெற்கு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (65) ஆகிய 3 பேரையும், 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசிய 8 நபர்களில் 5 பேர் ஏறி, குமார், கார்த்திகேயன் ஆகியோரை தாக்கி, படகில் இருந்த டீசல் கேன், லைட் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றனர்.
மேலும், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியைச் சேர்ந்த காதர்உசேனுக்கு சொந்தமான பைபர் படகில் ரமேஷ் (38), நல்லதம்பி (41), காளிதாஸ் (40), அருள்செல்வன்(42) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பைபர் படகில் அரிவாள், உருட்டு கட்டை ஆகிய ஆயுதங்களுடன் வந்த இலங்கையைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள், படகில் ஏறி, ரமேஷ் உள்ளிட்டோரை கட்டையால் தாக்கி, படகில் இருந்த பேட்டரிகள், செல்போன், 25 கிலோ எடையுள்ள வாளை மீன் வலை ஆகியவற்றை பறித்துக் கொண்டு, மீனவர்களை விரட்டியடித்தனர்.
பாதிக்கப்பட்ட 3 பைபர் படகுகளில் இருந்த 9 மீனவர்களும் நேற்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பி, அளித்த தகவலை அடுத்து, மீனவ கிராம பஞ்சாயத்தார் புகாரின்பேரில், மீன்வளத் துறை, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.