தருமபுரி அடுத்த மொரப்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த வெடி பொருட்கள்: ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை

தருமபுரி அடுத்த மொரப்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த வெடி பொருட்கள்: ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வெடி பொருட்கள் சிதறிக் கிடந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து கேரளா, கன்னியாகுமரி, கோவை மற்றும் சேலம் நோக்கி செல்லும் ரயில்கள், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று காலை ரயில்வே பணியாளர் ராஜா, மொரப்பூர் - சிந்தல்பாடி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரோந்து சென்றார். அப்போது, ஆவலம்பட்டி என்னுமிடத்தில் தண்டவாளத்தின் இடையில் துண்டான மின் வயர்கள், கரி மருந்து துகள்கள் மற்றும் 2 டெட்டனேட் டர்கள் ஆகியவை சிதறிக் கிடந் ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், ரயில் நிலைய தலைமை அலுவலருக்கு தகவல் அளித்தார். உடனடியாக வயர்லெஸ் மூலம் அவ்வழியே செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சேலம் உட்கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ராம்மோகன், தருமபுரி எஸ்பி லோகநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவினர், 2 மோப்ப நாய்கள் உதவியுடன் வெடி பொருட்கள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கிணற்றிலிருந்து நீர் உந்தும் மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் கண்டன்சர்கள், அதிலிருந்து வெளியான சிலிக்கான் துகள்கள் என்பது தெரியவந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், விவசாயிகள் யாராவது வீசிச் சென்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது

சேகரிக்கப்பட்ட பொருட்களின் வீரியம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் அவற்றை எடுத்துச் சென்றனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அவ்வழியே ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in