Published : 21 Apr 2022 06:14 AM
Last Updated : 21 Apr 2022 06:14 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 20 ஆண்டு பழமையான மரத்தை வெட்டிய நபர், ஒரு மாதத்தில் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ளதட்டார்மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகநாதன், இசக்கிமுத்து, பொன்சிங். இவர்கள் மூவரும் மது அருந்திவிட்டு தட்டார்மடம் பகுதி வியாபாரிகளிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர். மேலும், தட்டார்மடம் பிரதான சாலையில் நின்ற 20 ஆண்டு பழமையான மரம் ஒன்றை வெட்டியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட வியாபாரி சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்த நிலையில் பொன்சிங் என்பவர் முன்ஜாமீன் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மரத்தை வெட்டி சேதப்படுத்திய நபருக்கு முன்ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் முன்ஜாமீன் வழங்கும் பட்சத்தில் மரக்கன்றுகளை நட அவருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை மாவட்ட நீதிபதி சுமதி ஏற்றுக் கொண்டு, பொன்சிங் ஒருமாதத்துக்குள் தட்டார்மடம் பகுதியில்10 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்குமுன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மாவட்ட நீதிபதியின் இந்த புதுமையான உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT