Published : 21 Apr 2022 06:00 AM
Last Updated : 21 Apr 2022 06:00 AM
வேலூர்: வேலூர் கோட்டை வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ள சென்ற பாஜக நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.
வேலூர் கோட்டை வளாகத்தில் பாஜக இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் சதீஷ், மாரியப்பன் உள்ளிட்ட 30 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட நேற்று காலை சென்றனர்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் முன்பு தூய்மைப்பணியில் ஈடுபட சென்ற அவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பாஜக சார்பில் தூய்மை பணி செய்வதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். உடனடியாக கோட்டையிலிருந்து வெளியேற வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
அப்போது பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர் களை கோட்டை வளாகத்தில் இருந்து காவல் துறையினர் வலுக் கட்டாயமாக வெளியேற்றினர்.
இது குறித்து வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் தூய்மைப்பணி மேற்கொள்ள நேற்று காலை சென்றோம். அங்கு தூய்மைப்பணியில் ஈடுபட முயன்றோம். இதற்காக முன் கூட்டியே தொல் பொருள் துறை அதிகாரியிடம் கடிதம் கொடுத்தோம். அவர்கள் வாய்மொழியாக அனுமதி வழங்கினர். ஆனால், தூய்மைப் பணியில் ஈடுபட சென்ற எங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
நாங்கள் தூய்மை பணியில்ஈடுபடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி எங்களை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது. கோட்டையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT