'மத்திய தொகுப்பு மின்சாரம் தடைபட்டது' - இரவுநேர 'திடீர் மின்வெட்டு'க்கு செந்தில் பாலாஜி விளக்கம்

'மத்திய தொகுப்பு மின்சாரம் தடைபட்டது' - இரவுநேர 'திடீர் மின்வெட்டு'க்கு செந்தில் பாலாஜி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இன்று இரவு திடீர் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

இன்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளில் திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. மாவட்டங்கள் பலவற்றில் இரவு 8 மணியளவில் தொடங்கிய மின்வெட்டு இரண்டு மணிநேரங்கள் வரை நீடித்தது. சில இடங்களில் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. கடலூர், விருத்தாசலம், காரைக்குடி, கரூர், திருவண்ணாமலை, விருதுநகர், கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் இதே நிலை ஏற்பட்டது.

முன்அறிவிப்பு இல்லாமல் ஒரே தருணத்தில் நிகழ்ந்த இந்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மின்வெட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து டுவிட்டரில் மின்வெட்டு தொடர்பாக முறையிட்டு வருகின்றனர்.

இதற்கு தற்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், "இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்று திடீர் மின்வெட்டு குறித்த காரணத்தை விளக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in