Published : 20 Apr 2022 08:14 PM
Last Updated : 20 Apr 2022 08:14 PM
முதுமலை: தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம் கக்கநல்லாவை ஒட்டியுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று இரு குட்டிகளை ஈன்றது வனத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இங்குள்ள பழைய வரவேற்பு மையம் அருகே வனப் பகுதியில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டது. இந்நிலையில், கூட்டத்தில் இருந்த பெண் யானை, இரு தினங்களுக்கு முன், அப்பகுதியில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ரசித்துச் சென்றனர். பொதுவாக யானைகளிடம் இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் வருவது அபூர்வம். தகவலறிந்த வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில், காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்து வியப்படைந்தனர். தொடர்ந்து, யானைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கர்நாடக வனத்துறையினர் கூறும்போது, "கர்நாடகாவில் ஒரே காட்டுயானை இரண்டு குட்டிகளை ஈன்றிருப்பது இது இரண்டாவது முறையாகும். இரண்டு குட்டிகளும் நலமாக உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றனர்.
தமிழகத்தில் மூன்று முறை: முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூறும்போது, "பெண் யானை 15 வயதில் கர்ப்பம் தரித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும். அதன் கர்ப்ப காலம் 20 மாதங்கள். குட்டி பிறந்தவுடன் உடனடியாக ஆணா அல்லது பெண்ணா என கண்டுபிடிக்க முடியாது. அது 6 மாதம் வரை வளர்ந்த பிறகு அதில் யானையின் தந்தத்தை வைத்தே இனம் காணமுடியும். ஒரு யானை அதன் ஆயுள் காலத்தில் 13 முறை குட்டிகளை ஈனும்.
இதுபோன்று ஒரே சமயத்தில் இரு குட்டிகளை ஈன்ற அதிசய சம்பவம் தமிழகத்தில் ஏற்கெனவே மூன்று முறை நடைபெற்றுள்ளது. இதில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 1972-ம் ஆண்டு தேவகி என்கிற யானை சுஜய், விஜய் என்கிற இரு ஆண்குட்டிகளை ஈன்றது. இந்த குட்டிகள் கும்கிகளாக மாற்றப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக டாப்சிலிப் வன விலங்கு சரணாலயத்தில் வள்ளி என்கிற யானை அஸ்வினி, பரணி என்கிற இரு பெண் குட்டிகளை ஈன்றது. சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு காட்டுயானை இரு குட்டிகளை ஈன்றது."என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT