Published : 20 Apr 2022 04:06 PM
Last Updated : 20 Apr 2022 04:06 PM

புதிய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தியது ஏன்? - தமிழக அரசு தெளிவுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பிரதிநிதித்துவப்படம்.

சென்னை: புதிய விவசாய இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தியது குறித்து தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 19.04.2022 அன்று மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ''தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநில மாநாட்டை 2022 செப்டம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடத்துவது என்று மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. மேலும், ஐந்து பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. ஆனால் நடைமுறையில் ஐம்பதுக்கு மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து நகைக்கடன் பெற்றிருந்தவர்களில் பெரும் பகுதியானவர்கள் அரசின் இந்த சலுகையைப் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கிவிட்டது.

இந்த நிபந்தனைகளால் உண்மையில் பயன்பெற வேண்டிய, கட்டாயம் கடன் தள்ளுபடி கிடைக்க வேண்டியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். எனவே, அரசின் நிபந்தனைகளை தளர்த்தி கடன் சலுகை கட்டாயம் கிடைக்க வேண்டிய பயனாளிகளுக்கு கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலக்குழு அரசைக் கோருகிறது.

அதேபோல, தமிழக அரசு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு ஓராண்டிற்குள் வழங்குவோம் என்று அறிவித்ததை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றது. ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்து முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. ஆனால், அந்தப் பணி முழுமையடையவில்லை என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். பல இடங்களில் போதுமான மின்மாற்றி இல்லாமலும், கம்பிகள் இல்லாததாலும் கம்பம் மட்டும் நடப்பட்டு கணக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது. மின் இணைப்பு வழங்கியதிலும் தக்கல், சுயநிதி திட்டத்தின் கீழ் பணம் கட்டிய விவசாயிகளுக்கு தான் பெரும்பகுதி இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர இலவச மின்இணைப்பு மிகக் குறைவானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பிறகு கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாய இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தி இருப்பது தொடர்பாக அரசு விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டுமென்றும், போதுமான உபகரணங்கள் கிடைப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

மேலும், மின் இணைப்புக்கோரி காத்திருக்கிற விவசாயிகள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால வரையரையை தீர்மானித்து மின் இணைப்பு வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளுக்கு உதவிடவும் தமிழக அரசை மாநிலக்குழு வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x