

சென்னை: தமிழகத்தில் மாநில சராசரியை விட 25 மாவட்டங்கள் குறைவாக கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனைத் தொடர்ந்த தமிழகத்தில் முதல் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டியது. இக்காரணத்தால் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படாது என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இதன்படி தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் மாநில சராசரியை விட 25 மாவட்டங்களில் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் 1.4 கோடி பேர் 2 ஆம் தவணை தடுப்பூசியும், 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 12 - 14 வயதுடையோர் பிரிவில் சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, நாமக்கல், பூந்தமல்லி, பழனி, சேலம், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர் ஆகிய 18 சுகாதார மாவட்டங்களில் மாநில சராசரியான 70.35 என்ற சதவீதத்தை காட்டிலும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் 15 - 18 வயதுடையோர் பிரிவில் மாநில சராசரியான 86.79 சதவீதத்தை காட்டிலும் 24 மாவட்டங்களில் தடுப்பூசி செயல்பாடுகள் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 67.1 சதவீதத்தினர் மட்டுமே இந்தப் பிரிவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் என பல தரப்பினரும் தற்போது வரை தமிழகத்தில் 54.71 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாமல் உள்ளனர். இவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.