Published : 20 Apr 2022 08:19 AM
Last Updated : 20 Apr 2022 08:19 AM

இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல 8 லட்சம் விசா வழங்க திட்டம்: தூதரக அதிகாரிகள் தகவல்

சென்னை: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான (இந்தியா) ஆலோசகர் டொனால்டு ஹெஃப்ளின், சென்னையில் நேற்று கூறியதாவது;

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க விசா அதிக அளவில் வழங்கப்படவில்லை. தற்போது நோய் பரவல் குறைந்துள்ள நிலையில், விசா வழங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பணிகள்முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளன.

கரோனாவுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 12 லட்சம் அமெரிக்க விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். மாணவர்களுக்கு மே 2-வது வாரம் முதல் விசாவுக்கான நேர்காணல் தேதிகள் ஒதுக்கப்படும். தொழில் நிறுவனங்கள் மூலம் செல்ல விரும்புவோருக்கு செப்டம்பரில் விசா நேர்காணல் தேதிகள் ஒதுக்கப்படும்.

உயர் கல்விக்காக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் நேர்காணலின்போது முறையாக பதில் அளிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்புவதற்கான காரணத்தை கேட்டால், அந்த கல்லூரியின் வரலாறுஉள்ளிட்ட விவரங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும்.

விசா நடைமுறையை எளிதாக்கும் டிராப் பாக்ஸ் (Drop Box) வசதி சில தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து தரப்பினரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒருமுறை அமெரிக்கா சென்றுவந்த நபர்களின் கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் தூதரகத்திடம் ஏற்கெனவே இருக்கும். அவர்கள் டிராப் பாக்ஸ் வசதி மூலம், நேர்காணலில் பங்கேற்காமலே விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தற்போது உறவினர் மறைவு, மருத்துவ சிகிச்சை, முக்கிய வர்த்தக காரணங்கள் என அவசர தேவைக்காக செல்வோருக்கு மட்டும் சிறப்பு விசா அனுமதிகள் வழங்கப்படுகின்றன. சிலர் அவசர தேவை இருப்பதாக தவறான தகவல் தெரிவித்து விசா பெறுகின்றனர். எனவே, திருமணம், பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல விரும்புவோர் பொய்யான காரணங்கள் கூறி விசா பெற முயற்சிக்க வேண்டாம். அவர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். செப்டம்பர் நேர்காணலுக்கான முன்பதிவுகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்தசந்திப்பின்போது தூதரக சேவைகளுக்கான (சென்னை) தலைவர் கேத்ரின் எல்.பிளாஷ்பர்ட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x