

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்துமுன்னாள் முதல்வர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வா.புகழேந்தி ஆணையத்தில் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். அப்போலோ மருத்துவர்கள் 4 பேர் ஆஜராகி மீண்டும் வாக்குமூலம் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அப்போலோ மருத்துவமனை தரப்பில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்த மருத்துவர்களின் சாட்சியத்தை தெளிவுபடுத்தும் விதமாக மீண்டும் 11 மருத்துவர்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தது. அதன்படிஅப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 7 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது.
இதில் நேற்று மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், டொமினிக் சேவியோ, தர், ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்துவாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைத்த முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அரசிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு வா.புகழேந்தி ஆணையத்தில் மனு அளித்தார்.
அதில், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ஆணையம் அமைத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் எனக் கோரியதே ஓ.பன்னீர்செல்வம்தான். எனவே இதுதொடர்பாக ஆணையம் அமைத்து உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரித்து, ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியே கொண்டுவரவேண்டும். அதேபோல முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் மறுவிசாரணை நடத்த வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையும் நேற்று ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது வா.புகழேந்தி நேரில் ஆஜராகி தனது கோரிக்கை தொடர்பாக விளக்கமளித்தார்.
அப்போது நீதிபதி ஆறுமுகசாமி குறுக்கிட்டு, ஏற்கெனவே இதுதொடர்பாக ராமமோகன்ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனிடம் போதுமான அளவுக்கு விசாரணை நடத்தப்பட்டு விட்டது. பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றார். புகழேந்தி தனது விளக்கத்தை வாக்குமூலமாக அளிக்கவரும் ஏப்.26-ல் மீண்டும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.