

கள்ளக்குறிச்சி: இரு ஆண்டுகளுக்குப் பின்புநடைபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் திரண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். கூத்தாண்டவரிடம் தாலி கட்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்காக களப்பலி காணும் அரவான் (கூத்தாண்டவர்), பலியிடுவதற்கு முன்பு, திருமணம் முடித்து ஒருநாள் இல்லற வாழ்க்கையை வாழ்வார். அதன் பின்பு பலிகளம் புகுவார்.
இந்தத் திருமண நிகழ்வையும், அதைத் தொடர்ந்த களப்பலியையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் அரவான் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இப்பெருவிழாவில் திருநங்கைகள் கூத்தாண்டவரை வேண்டி, அவருக்கே தங்களை மணம் முடித்துக் கொள்ளும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து தேரோட்டமும், அரவானுக்காக தாலி அறுத்து அழுகளம் காணும் நிகழ்வும் நடைபெறும். நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்து, இதில் கலந்து கொள்வர்.
நடப்பு ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ‘அரவான்’ எனப்படும் கூத்தாண்டவருக்கு திருநங்கைகள் மண முடித்தல் நிகழ்வு நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரை தொடர்ந்தது.
இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் பங்கேற்று, கூத்தாண்டவரிடம் தாலி கட்டி வழிபட்டனர். பல மூத்த திருநங்கைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, இளைய திருநங்கைகளை ஆசீர்வதித்தனர்.
அதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் திருநங்கைகள் கும்மியடித்து, விடியவிடிய ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளாக இத்திருவிழா நடைபெறாத சூழலில், நேற்றைய கூவாகம் திருவிழாவில் திருநங்கைகளின் வருகை வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தது. திருமண நிகழ்வைத் தொடர்ந்து, அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெறுகிறது.