

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 290 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, வர்த்தகத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் அதிகளவில் வந்து செல்லும் வகையில், கோவை விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையை மேம்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் தற்போது 420 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 9,500 அடி நீளத்துக்கு ஓடுதளம் அமைந்துள்ளது. இத்துடன் கூடுதலாக 640 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை இணைத்து, ஓடுதளப் பாதையை 12,500 அடி நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக மொத்தம் 644 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் ஆகிய கிராமங்களில் இந்த நிலங்கள் அமைந்துள்ளன. கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் 30 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்காக உள்ளது. இதை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 152 ஏக்கர் நிலம் இந்திய பாதுகாப்புத் துறைக்குசொந்தமானது. இந்த இடத்தைவிமான நிலைய விரிவாக்கப் பணிக்காக ஒதுக்க பாதுகாப்புத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மீதமுள்ள 462 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த பட்டா நிலங்களின் உரிமையாளர்களாக 3,075 பேர் உள்ளனர்.
விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக கடந்தாண்டு இறுதியில் அரசு சார்பில் ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
குடியிருப்பு நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.1,500, விவசாய நிலத்துக்கு ஒரு சதுரடிக்கு ரூ.900 என இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு சராசரியாக 4 முதல் 6 இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதுவரை 290 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 172 ஏக்கர் இடமும் விரைவில் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.